தளபதியின் சமரசம் 4 comments

மன்னர் முல்லாவுக்கு ஒரு வீட்டுப் பகுதியை அன்பளிப்பாகக் கொடுத்தார்.
அந்த வீட்டுக்கு மாடி உண்டு. அந்த மாடிப்பகுதியை மன்னர் ஒரு படைத் தளபதிக்கு அன்பளிப்பாகக் கொடுத்திருந்தார்.

மாடியில் இருக்கும் படைத் தளபதியின் மனைவி அடிக்கடி கல் உரலில் மாவு இடிப்பாள்.
அந்தச் சமயத்தில் கீழ் வீட்டில் இருக்கும் முல்லாவுக்கு பெரிய தொந்தரவாக இருக்கும்.

மாவு இடிக்கும் போது வீடே அதிரும். இடியோசை மாதிரி சப்தமும் கேட்கும்.

முல்லா இரண்டு மூன்று தடவை படைத் தளபதியைச் சந்தித்து கொஞ்சம் மெதுவாக மாவு இடிக்கு மாறு அவர் மனைவிக்குச் சொல்லுமாறு கேட்டுக் கொண்டார். படைத் தளபதிக்கோ கோபம் வந்து விட்டது.

இது மன்னர் எனக்காக அளித்த வீடு. ஆகவே இது எனக்குச் சொந்தமானது. என் வீட்டில் என் மனைவி எப்படி வேண்டுமானாலும் மாவு இடிப்பாள். அதைக் கேட்பதற்கு நீ யார் ? என்று முல்லாவை அதட்டி அனுப்பி விட்டார்.

மறுநாள் முல்லா கீழே உள்ள தன் வீட்டுப் பகுதியில் கடப்பாறையைக் கொண்டு இடித்துக் கொண்டிருந்தார்.

கீழே என்ன செய்கிறாய் ? என்று படைத் தளபதி மாடியில் இருந்து அதட்டினார்.

கீழ்ப்பக்கம் இருக்கும் என் வீட்டை முற்றிலுமாக இடித்துத் தள்ளிவிட்டுப் புதிதாக கட்டத் தீர்மானித்திருக்கிறேன் என்றார் முல்லா.

அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த படைத் தளபதி என்னைய்யா முட்டாளாக இருக்கிறீரே, கீழ்வீடு முழுவதையும் இடித்தால் மேல் வீடு என்ன ஆகும் என்று யோசித்தீரா ? என்று கோபத்தோடு கேட்டார்.

மேல் வீட்டைப் பற்றி நான் ஏன் கவலைப்பட வேண்டும். எனக்குச் சொந்தமான வீட்டை நான் இடிக்கிறேன். இதில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை என்று கூறி விட்டு முல்லா சுவரை இடிக்கத் தொடங்கினார்.

பதறிப்போன படைத்தளபதி முல்லாவிடம் சமரசம் பேச முற்பட்டார்.

நாம் இருவரும் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொள்ளாமல் ஒருவரை யொருவர் அனுசரித்தச் செல்வதுதான் நல்லது. நாம் இருவரும் நண்பர்களாக இருப்போம் என்றார் தளபதி.

நான் எப்போதுமே யாருக்கும் நண்பன்தான்! என்று கூறிவிட்டு முல்லா சிரித்தார்.

தலையில் விழுந்த பழம் 0 comments

நமது நாட்டு ஆலமரம் போல துருக்கி நாட்டில் மல்பெரி என்ற ஒரு மரம் உண்டு நீண்ட கிளைகளுடன். உயர்ந்து அடர்ந்து செழித்து அந்த மரம் காணப்படும. ஆனால் அந்த மரத்தின் பழமோ சிறிய கோலிக் குண்டு அளவுக்கு மிகச் சிறியதாக இருக்கும்.

ஒருநாள் முல்லா அந்த மல்பெரி மரத்தின் நிழலில் அமர்ந்து களைப்பாறிக் கொண்டிருந்தார். அப்போது வழிப்போக்கனான ஒர் இளைஞன் அங்கே வந்து சேர்ந்தான். நீண்ட தூரத்திலிருந்து வெய்யிலில் அவன் நடந்து வந்திருக்கு வேண்டும் நிழலைக் கண்டதும் அவனுக்குப் பேரானந்தமாய் இருந்தது.

மரத்திலிருந்து வேரின் மீது தலைவைத்துப் படுத்துச் சற்று நேரம் களைப்பாறினான்.

அவன் பார்வை முல்லாவின் மீது விழுந்தது. பிறகு அண்ணாந்து மரத்தைப் பார்த்தான் மரத்தின் சின்னஞ்சிறு பழங்கள் அவன் கண்களில் பட்டன.

அவன் உரக்கச் சிரித்தான்.

முல்லா அவனைத் திரும்பிப் பார்த்துவிட்டு என்ன சிரிக்கிறீர்? என்று கேட்டார்.

கடவுளின் முட்டாள்தனத்தை எண்ணிச் சிரிக்கிறேன் என்றான் அந்த வழிப்போக்கன்.

கடவுள் அப்படி என்ன முட்டாள்தனம் செய்து விட்டார் என்று முல்லா ஆச்சரியத்துடன் கேட்டார்.

இந்த மரத்தைப் பாருங்கள் ஒரு பெரிய கூடாரத்தைப்போல எவ்வளவு பெரிதாக இருக்கின்றது. இந்த மரத்தின் பழங்களைப் பாருங்கள் எவ்வளவு சிறியனவாக நுண்ணியவையாக உள்ளன இவ்வளவு பெரிய மரத்தின் பழங்கள் எவ்வளவு பெரியவையாக இருக்கவேண்டும் என்று கூட தீர்மானிக்க முடியாத கடவுளை முட்டாள் என்று கூறுவதில் என்ன தவறு இருக்க முடியும்? என்றான் வழிப்போக்கன்.

முல்லா பதில் ஒன்றும் பேசாமல் வாயை மூடிக் கொண்டார்.

சற்று நேரம் கழித்து காற்று பலமாக அடித்தது. மரத்தின் கிளைகள் வேகமாக அசைந்தாடிக் கிளைகளில் இருந்த சின்ன்சிறு பழங்கள் பொலபொலவெனக் கொட்டின.

சில பழங்கள் வழிப்போக்கனின் தலையிலும் விழுந்தன.

முல்லா அவனைப் பார்த்து நண்பரே உமது தலைமீது ஏராளமான பழங்கள் விழுந்தன போலிருக்கிறதே! என்று கேட்டார்.

ஆமாம் காற்றில் அவை உதிர்ந்துவிட்டன என்றான் வழிப்போக்கன்.

கடவுள் முட்டாளாக இல்லாமலிருந்து புத்திசாலியாக இருந்து பெரிய பாறைக்கல்லைப் போன்ற பெரிய பழங்களை இந்த மரத்திலே உற்பத்தி செய்திருந்தாரானால் என்ன ஆகியிருக்கும். உமது தலை நசுங்கி நாசமாகப் போயிருக்குமல்லாவா? என்று கேட்டார் முல்லா.

வழிப்போக்கன் யோசித்தான்.

நண்பரே, கடவுள் சிருஷ்டியில் அனாவசியமானதும் அர்த்தமற்றதும் எதுவும் இல்லை எதையும் ஒரு காரணத்தோடுதான் இறைவன் சிருஷ்டித்திருக்கிறாரர்.

இவ்வளவு விசாலமான மரக்கிளைகளின் நிழலில் நிறைய மனிதர்களும் விலங்குகளும் நிழலுக்காக வந்து அண்டும் என்று கடவுளுக்குத் தெரியும் இதனால்தான் கடவுள் நிழல்தரும் பெரிய மரத்தின் பழங்களை மிகவும் சிறியனவாகப் படைத்திருக்கிறார் என்றார் முல்லா.

ஐயா தாங்கள் யார் என்று தெரியவில்லையே ஒரு மகான் போல் பேசுகிறீர்களே என்று பயபக்தியுடன் கேட்டான் வழிப்போக்கன்.

கடவுள் மகான்களை சிருஷ்டிப்பதில்லை மற்ற உயிர்களைப் போல மனிதர்களையும் சிருஷ்டிக்கிறார். நான் உம்மைப்போல ஒரு மனிதன்தான் என்றார் முல்லா.

தற்பெருமை 0 comments

ஒரு தடவை முல்லா ஒரு குளக்கரை ஒரமாக நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது வழியில் இருந்த ஒரு கல் தடுக்கி குளத்தில் விழ அவருக்குப் பின்னால் வந்து கொண்டிருந்த ஒரு மனிதர் பாய்ந்து வந்து முல்லாவைக் குளத்தில் விழாமல் காப்பாற்றினார்.

முல்லா அவருக்கு நன்றி சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

ஆனால் முல்லாவைக் காப்பாற்றியவரோ சும்மா இருக்கவில்லை. முல்லாவை எந்த இடத்தில் யாருக்கு நடுவே சந்தித்தாலும் குளத்தில் விழ இருந்த முல்லாவை நான்தான் காப்பாற்றினேன் என்று சொல்ல தொடங்கிவிட்டார்.

அவருடைய தற்பெருமைப் பேச்சைக் கேட்டுக் கேட்டு முல்லாவுக்கு சலிப்பு ஏற்பட்டுவிட்டது. அவருக்கு தகுந்த நேரத்தில் சரியான பாடம் கற்பிக்க வேண்டும் என்று தீர்மானித்தார்.

ஒரு நாள் பழைய குளக்கரைப் பக்கம் ஜன நடமாட்டம் அதிகமாக இருந்தது. அந்தப் பக்கம் வந்த முல்லா அந்த தற்பெருமைக்காரர் குளக்கரையில் யாரோ ஒருவருடன் உரையாடிக் கொண்டிருப்பதைக் கண்டார்.

திடீரென முல்லா குளத்தினுள் பாய்ந்து விட்டார்.

முல்லா குளத்தில் விழுந்து விட்டார் என நாலாபுறமிருந்த மக்களிடமிருந்து கூக்குரல் எழுந்தன.

பலர் முல்லாவைக் காப்பாற்றுவதற்காக குறத்தில் இறங்கினர்.

முன்னர் முல்லாவைக் குளத்தில் விழாமல் காப்பாற்றியவரும் அவசர அவசரமாகக் குளத்தில் இறங்கினார்.

முல்லாவோ யாரைப் பற்றியும் கவலைப்படாமல் குளத்தில் நீச்சலடித்து விளையாடிக் கொண்டிருந்தார்.

முல்லாவுக்கு நீந்தத் தெரியும் என்ற விஷயம் இதுவரை யாருக்கமே தெரியாது.

முல்லா முன்னர் தம்மைக் காப்பாற்றியதாக தற்பெருமை பேசும் மனிதரைச் சுட்டிக் காண்பித்து என் அருமை நண்பரை உங்களுக்கெல்லாம் அறிமுகப்படுத்த நினைக்கிறேன். நீந்தத் தெரிந்த என்னை இந்தக் கனவான் ஒரு தடவை நீரில் மூழ்கி விடாமல் காப்பாற்றி பேருதவி செய்தார் என்றார்.

தத்துவஞானியிடம் வேடிக்கை 0 comments

முல்லாவின் ஊருக்கு ஓரு தத்துவ ஞானி வந்தார் ஒவ்வொரு நாளும் மாலையில் பொதுமக்கள் அடங்கிய ஒரு கூட்டத்தில் தத்துவ ஞானி சொற்பொழிவாற்றினார்.

ஓருநாள் தத்துவ ஞானி சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்த போது கீழக்கண்டவாறு ஒரு தத்துவத்தைக் கூறினார்.

இறைவன் சிருஷ்டியில் எல்லா உயிர்களுமே சமம்தான். நாம் மற்ற மனிதர்களை மட்டுமின்றி மிருகங்கள் போன்ற உயிரினங்களையும் நமக்குச் சமமாக பாவித்து அன்புடன் நடத்த வேண்டும்.

அந்தக் கூட்டத்தில் முல்லாவும் இருந்தார். தத்துவ ஞானியிடம் ஒரு வேடிக்கை செய்ய நினைத்தார்.

உடனே அவர் எழுந்து தத்துவ ஞானி அவர்களே, நீங்கள் கூறும் கருத்து அவ்வளவு சரியல்ல என்று எனக்குத் தோன்றுகிறது என்றார்.

இதை எந்தக் கண்ணோட்டத்தில் கூறுகிறீர். நீர் உமது வாழ்க்கையில் ஏதாவது சோதனை செய்து பார்த்தீரா? என்று தத்துவஞானி கேட்டார்.

சோதனை செய்து பார்த்த அனுபவம் காரணமாகத்தான் இந்தக் கருத்தை கூறுகிறேன் என்றார் முல்லா.

என்ன சோதனை செய்தீர்? அதை விளக்கமாகக் கூறும் தத்துவ ஞானி கேட்டார்.

நான் என்னுடைய மனைவியையும் என் வீட்டுக் கழுதையும் சரி சமமாக நடத்தினேன் என்றார்.

அதன் விளைவு என்ன? என்று தத்துவ ஞானி கேட்டார்

எனது பரிசோதனையின் விளைவாக ஒரு நல்ல கழுதையும், கெட்ட மனைவியும் கிடைத்தாள் என்று சொன்னார்.

இதைக் கேட்டதும் தத்துவ ஞானி உட்பட அனைவரும் வாய் விட்டுச் சிரித்தனர்.

சொன்ன சொல் மாறாதவர் 0 comments

வெகு காலத்திற்குப் பிறகு வெளியூர் அன்பர் ஒருவர் முல்லாவை வந்து சந்தித்தார்.

இருவரும் சுவையாக நீண்ட நேரம் உரையாடிக் கொண்டிருந்தனர்.

பேச்சின் இடையே வெளியூர் அன்பர் முல்லா அவர்களே தங்களது வயது என்ன? என்று கேட்டார்.

நாற்பது வயது என்று முல்லா பதிலளித்தார். வெளியூர் நண்பர் வியப்படைந்தவராக என்ன முல்லா அவர்களே, ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் தங்களைச் சந்தித்தபோதும் உங்களுக்கு வயது நாற்பது என்றுதான் கூறினீர்கள். கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகும் அதே நாற்பது வயதையே கூறுகிறீர்களே * அது எப்படி? என்று கேட்டார்.

நான் சொன்ன சொல் மாறாதவன். ஓரு தடவை சொன்ன சொல்லை மாற்றிச் சொல்லும் ஈனபுத்தி எனக்குக் கிடையாது என்று சிரித்துக் கொண்டே கூறினார் முல்லா.

செயற்கரிய சாதனை 0 comments

முல்லாவிற்கு ஏற்பட்டு வரும் புகழையும் மதிப்பையும் கண்டு பொறாமைபிடித்த சிலர் இருந்தார்கள்.

அவர்களில் சிலர் மன்னர் அவையில் அமைச்சர்களாகவும் இருந்தனர்.

அவர்கள் மன்னரிடம் முல்லா பற்றி ஏதாவது கோள் சொல்லி அவர் மதிப்பைக் குறைப்பதிலேயே கண்ணாக இருந்தனர்.

ஒருநாள் மன்னர் முல்லாவைக் கௌரவிக்கும் விதத்தில் அவருக்கு விருது ஒன்று அளிக்கத் தீர்மானித்து சபையினர் கருத்தைக் கேட்டார்.

முல்லாவைப் பிடிக்காதவர்கள் எழுந்து முல்லா எந்த வகையிலும் அறிவாளி அல்ல. சாமானிய மக்கள் செய்யக்கூடிய செயல்களைத்தான் அவர் பேசி செய்து வருகிறார். சாமானிய மனிதர்களின் இயல்புக்கு மீறிய அற்புதம் எதையும் அவர் நிகழ்த்தியது இல்லை. அதனால் அவர் எந்த வகையிலும் சிறப்பு செய்வதற்குத் தகுதியானவர் இல்லை என்று ஒரே குரலில் தங்கள் அதிருப்தியை தெரிவித்தனர்.

அந்தச் சமயம் முல்லா சபையில் இல்லை. சபையை நோக்கி வந்து கொண்டிருந்த அவருக்கு அவருடைய எதிர்ப்பாளர்களின் பேச்சு காதில் விழுந்தது.

உடனே அவர் கீழே குனிந்து கைகளைத் தரையில் ஊன்றி கால்களாலும் கைகளாலும் ஒரு விலங்கு நடப்பதுபோல நடந்து சபைக்குள் பிரவேசித்தார்.

அதைக் கண்டு சபையில் இருந்தவர்கள் வியப்பும் திகைப்பும் அடைந்தனர்.

மன்னர் வியப்பு தோன்ற சிரித்தவாறு என்ன முல்லா அவர்களே எதோ ஒரு விலங்கு போல நான்கு கால்களின் உதவியுடன் நடந்து வருகிறீரே, உமக்குப் பைத்தியம் பிடித்து விட்டதா என வினவினார்.

முல்லா எழுந்து மன்னரை வணங்கி மன்னர் பெருமானே, நான் மனித இயல்புக்கு மீறிய அசாதாரண செயல் எதையும் செய்யவில்லை என்று என் நண்பர்கள் சிலருக்கு வருத்தம். அதனால்தான் மனித இயல்புக்கு மாறுபட்டு ஒரு மிருகம்போல நடந்து புரட்சிகரமான சாதனை ஒன்று செய்து காண்பித்தேன். இனி என் நண்பர்கள் என் அறிவாற்றலைச் சந்தேகப்பட மாட்டார்கள் என்றார்.

முல்லாவின் எதிரிகளான பொறாமைக்கார்கள் வெட்கித் தலை குனிந்தார்கள். மன்னர் முல்லாவின் அறிவுச்சாதுரியத்தைக் கண்டு மகிழந்து பரிசுகள் அளித்தார்.

சூரியனா-சந்திரனா 0 comments

அறிர்கள் கூடியிருந்த ஒரு சபையில் மிகவும் பயனுடையது எது சூரியனா அல்லது சந்திரனா? என்பது குறித்துப் பட்டிமன்றம் ஒன்று நடந்து கொண்டிருந்தது.

அங்கே பேசியவர்கள் பெரும்பான்மையினர் சந்திரனைவிட சூரியனால்தான் உலகத்திற்கு அதிகப் பயன் உண்டு என்ற கருத்தையே வலியுறுத்திப் பேசினர்.

அப்போது பேசியவர்களை நையாண்டி செய்து வேடிக்கை பார்க்க வேண்டும் என்று முல்லாவுக்குத் தோன்றியது.

அவர் உடனே எழுந்து அறிர் பெருமக்களே, இங்கே நடந்த பட்டிமன்றம் தொடர்பாக எனது கருத்தைக் கூறலாமா? என்று கேட்டார்.

இது பொதுமன்றம், இங்கு யாரும் தங்கள் கருத்தினை எந்தவிதத் தடையுன்றிக் கூறலாம். முல்லா அவர்களே உங்கள் கருத்தைக் கூறுங்கள் என்று அறிஞர் பெருமக்கள் கேட்டுக் கொண்டனர்.

சூரியனைவிடச் சந்திரனால்தான் உலத்திற்கு அதிகமான பயன் கிடைக்கிறது என்று நான் கருதுகிறேன் என்றார் முல்லா.

அது எவ்வாறு விளக்குங்கள் என்று அறிர்கள் கேட்டனர்.

பகலில் நமக்கு இயற்கையாக வெளிச்சம் இருக்கிறது. அதனால் சூரியனுடைய உதவி நமக்குத் தேவையே இல்லை. இரவில் இருளாக இருக்கிறது. சந்திரன் இருளை அகற்றி நமக்கத் தேவையான ஒளியை இரவிலே அளிக்கிறது. அதனால் சந்திரன் தான் நமக்கு அதிகப் பயனை அளிக்கின்றது என்றார் முல்லா.

முல்லா தங்களை நையாண்டி செய்கிறார் என்பதை உணர்ந்து அறிர்கள் சிரித்து மகிழ்ந்தார்கள்.