செயற்கரிய சாதனை

முல்லாவிற்கு ஏற்பட்டு வரும் புகழையும் மதிப்பையும் கண்டு பொறாமைபிடித்த சிலர் இருந்தார்கள்.

அவர்களில் சிலர் மன்னர் அவையில் அமைச்சர்களாகவும் இருந்தனர்.

அவர்கள் மன்னரிடம் முல்லா பற்றி ஏதாவது கோள் சொல்லி அவர் மதிப்பைக் குறைப்பதிலேயே கண்ணாக இருந்தனர்.

ஒருநாள் மன்னர் முல்லாவைக் கௌரவிக்கும் விதத்தில் அவருக்கு விருது ஒன்று அளிக்கத் தீர்மானித்து சபையினர் கருத்தைக் கேட்டார்.

முல்லாவைப் பிடிக்காதவர்கள் எழுந்து முல்லா எந்த வகையிலும் அறிவாளி அல்ல. சாமானிய மக்கள் செய்யக்கூடிய செயல்களைத்தான் அவர் பேசி செய்து வருகிறார். சாமானிய மனிதர்களின் இயல்புக்கு மீறிய அற்புதம் எதையும் அவர் நிகழ்த்தியது இல்லை. அதனால் அவர் எந்த வகையிலும் சிறப்பு செய்வதற்குத் தகுதியானவர் இல்லை என்று ஒரே குரலில் தங்கள் அதிருப்தியை தெரிவித்தனர்.

அந்தச் சமயம் முல்லா சபையில் இல்லை. சபையை நோக்கி வந்து கொண்டிருந்த அவருக்கு அவருடைய எதிர்ப்பாளர்களின் பேச்சு காதில் விழுந்தது.

உடனே அவர் கீழே குனிந்து கைகளைத் தரையில் ஊன்றி கால்களாலும் கைகளாலும் ஒரு விலங்கு நடப்பதுபோல நடந்து சபைக்குள் பிரவேசித்தார்.

அதைக் கண்டு சபையில் இருந்தவர்கள் வியப்பும் திகைப்பும் அடைந்தனர்.

மன்னர் வியப்பு தோன்ற சிரித்தவாறு என்ன முல்லா அவர்களே எதோ ஒரு விலங்கு போல நான்கு கால்களின் உதவியுடன் நடந்து வருகிறீரே, உமக்குப் பைத்தியம் பிடித்து விட்டதா என வினவினார்.

முல்லா எழுந்து மன்னரை வணங்கி மன்னர் பெருமானே, நான் மனித இயல்புக்கு மீறிய அசாதாரண செயல் எதையும் செய்யவில்லை என்று என் நண்பர்கள் சிலருக்கு வருத்தம். அதனால்தான் மனித இயல்புக்கு மாறுபட்டு ஒரு மிருகம்போல நடந்து புரட்சிகரமான சாதனை ஒன்று செய்து காண்பித்தேன். இனி என் நண்பர்கள் என் அறிவாற்றலைச் சந்தேகப்பட மாட்டார்கள் என்றார்.

முல்லாவின் எதிரிகளான பொறாமைக்கார்கள் வெட்கித் தலை குனிந்தார்கள். மன்னர் முல்லாவின் அறிவுச்சாதுரியத்தைக் கண்டு மகிழந்து பரிசுகள் அளித்தார்.

0 comments: